சென்னை: அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பெரிய சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து, ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதா என்ற கோணத்தில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு ஒரு விரைவு ரயில் நேற்று இரவு புறப்பட்டது. இந்த ரயில் அம்பத்தூர் ரயில் நிலையத்தை கடந்தபோது, அம்பத்தூர் ரயில் நிலையம் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாளத்தில் (விரைவு பாதையில்) பெரிய கட்டிட கழிவு (சிமென்ட் கலந்த செங்கல்) வைக்கப்பட்டிருந்ததை ரயில் ஓட்டுநர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்தார்.
உடனடியாக, ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில், ஆவடி ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து சென்று, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ எடை கொண்ட சிமென்ட் கலவை கலந்த செங்கலை அகற்றினர். தொடர்ந்து, அங்கிருந்து 100 மீட்டர் வரை நடந்து சென்று போலீஸார் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று காலையும் சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீஸார் சென்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.
விரைவு ரயில் பாதையில் கட்டிட கழிவுப் பொருளை (சிமென்ட் கலந்த செங்கல்) வைத்து, ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில், ஆவடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.