மதுரை புறநகரில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புக முயற்சித்த முகமூடி கொள்ளையர்கள்!


மதுரை: மதுரை புறநகர் பகுதியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் முகமூடி அணிந்தவர்கள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து விரிவாக்க பகுதியில் புதிய குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அச்சம்பத்து அருகிலுள்ள ராம்கோ நகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்து 4 வீடுகளில் முகமூடி (மங்கி குல்லா அணிந்தவர்கள்) கொள்ளையர்கள் கதவை உடைக்க முயற்சித்துள்ளனர். ஒரு வீட்டின் கதவை உடைக்க முயற்சிக்கும்போது, சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ரவி என்பவர் கூச்சலிட்டதால் அக்கம், பக்கத்தினரும் திரண்டனர்.

இதை கண்ட முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி மதுரை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதியினர் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததை அடுத்து போலீஸாரும் முகமூடி கொள்ளையர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியினர் கூறுகையில், “நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து, விராட்டிபத்து போன்றவை வளர்ந்து வரும் விரிவாக்கப் பகுதிகள். இப்பகுதிகளில் குடியிருப்புகளும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்ட முயற்சித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். இப்பகுதியில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுக்கவேண்டும், இரவில் ரோந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீஸாரிடம் கேட்டபோது, “முகத்தை மூடிய நிலையில் வந்த நபர்கள் ஓரிரு வீட்டின் கதவை உடைக்க முயற்சித்திருப்பது தெரிகிறது. சிசிடிவி பதிவுகளை முழுமையாக சேகரித்து அவர்களை தேடி வருகிறோம். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும்” என்றனர்.

x