பள்ளியின் இரும்பு கேட் விழுந்து 6 வயது சிறுவன் பலி: விளையாடியபோது நடந்த பரிதாபம்


ஹைதராபாத்: ஹைதராபாத் புறநகரில் உள்ள ஹயத்நகர் ஜில்லா பரிஷத் பள்ளியில் இரும்பு கேட் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு நீதி கோரி குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

ஹயத்நகர் ஜில்லா பரிஷத் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் அஜய், நேற்று இரும்பு கேட் விழுந்ததில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் நடந்துள்ளது.

அஜய் பள்ளியில் உள்ள இரும்பு கேட் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, சில குழந்தைகள் கேட்டில் ஏறி அங்கும் இங்கும் ஆடினர். பலவீனமாக இருந்ததால், இரும்பு கேட் அஜய் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அஜய், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, வனஸ்தலிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை கண்டித்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு மறியல் செய்தனர். ஹயாத்நகர் கார்ப்பரேட்டர் ஜீவன் ரெட்டி மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவர்களும் சிறுவனின் குடும்பத்திற்கு நீதி கோரி போராட்டத்தில் கலந்து கொண்டனர். சிறுவனின் மரணத்திற்கு பள்ளி உரிமையாளர் பொறுப்பேற்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும் அவரது குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து ரங்காரெட்டி மாவட்ட கல்வி அலுவலர் (டிஇஓ) சுசீந்தர் ராவ் பள்ளிக்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x