புதுடெல்லி: சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அவர் உயிருடன் இருக்க விரும்பினால், கோயிலில் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 கோடி செலுத்த வேண்டும் என மும்பை காவல்துறைக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் வந்தது.
மும்பை போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் நேற்று இரவு மிரட்டல் வந்தது. போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட செய்தியில், "லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் பேசுகிறேன். சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் கோயிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால், நாங்கள் அவரைக் கொன்று விடுவோம். எங்கள் கும்பல் இன்னும் செயல்பாட்டில்தான் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வாரத்தில் சல்மான் கானுக்கு வரும் இரண்டாவது கொலை மிரட்டல் இதுவாகும். கடந்த வாரம், அக்டோபர் 30 ஆம் தேதி, மும்பை போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, சல்மான் கானிடம் ரூ.2 கோடி கேட்டு இதேபோன்ற மிரட்டல் வந்தது. இது தொடர்பாக பாந்த்ரா கிழக்கில் வசிக்கும் ஆசம் முகமது முஸ்தபா உடனடியாக கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, சல்மான் கான் மற்றும் பாந்த்ரா கிழக்கு எம்எல்ஏ ஜீஷன் சித்திக் ஆகியோரை மிரட்டியதற்காக நொய்டாவைச் சேர்ந்த 20 வயதான குஃப்ரான் கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த காலங்களில், பாலிவுட் திரைப்படமான ‘ஹம் சாத் சாத் ஹைன்’ படப்பிடிப்பின் போது ராஜஸ்தானில் மான் வேட்டையில் ஈடுபட்ட வழக்கின் காரணமாக, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து சல்மான் கானுக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. பிஸ்னோய் கும்பலைச் சேர்ந்த நபர்கள் ஏப்ரல் மாதம் பாந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து நடிகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.