குளிர்பானத்தில் போதைப்பொருள்: நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை இயக்குநர் கைது


உத்தரப்பிரதேசம்: கான்பூரில் 22 வயது நர்ஸை தனியார் மருத்துவமனையின் இயக்குநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கலந்த குளிர்பானத்தை கொடுத்து நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

22 வயது பெண் கடந்த இரண்டு மாதங்களாக கல்யாண்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அவர் மருத்துவமனையில் இயக்குநர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டார். இதனையடுத்து, வேலை இருப்பதாக சொல்லி இரவு மருத்துவமனையில் தங்குமாறு இயக்குநர் கேட்டுக்கொண்டார்.

இந்த சூழலில், நள்ளிரவில் அவர் அந்த நர்ஸை தனது அறைக்கு வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச்சென்று கதவை பூட்டியுள்ளார். மேலும், நர்ஸை பணயக் கைதியாக பிடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட விருந்தில் போதைப்பொருள் கலந்து கொடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட செவிலியர் குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் மருத்துவமனை இயக்குநர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, நீதிபதி முன்பு வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கல்யாண்பூரின் காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே கூறினார்.

x