பொன்னேரி: பழவேற்காடு அருகே இறால் பண்ணை ஊழியர் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் இருவரை நேற்று போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள தாங்கல் பெரும்புலம்- பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ்(45). இவர், தாங்கல்பெரும்புலம் பகுதியில் உள்ள ரங்கநாதன் இறால் பண்ணையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல் கடந்த 2-ம் தேதி இரவு இறால் பண்ணைக்கு காவல் பணியில் ஈடுபட சென்ற சிவராஜ், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து, சிவராஜின் மனைவி பவானி, சிவராஜ் பணிபுரிந்து வந்த இறால் பண்ணைக்கு சென்று பார்த்த போது, அங்கு சிவராஜின் காலணி மற்றும் மொபைல் போன் மட்டும் இருந்துள்ளது. ஆனால், சிவராஜ் இல்லை.
இதையடுத்து, காணாமல் போன தன் கணவரை கண்டுபிடித்து தருமாறு காட்டூர் காவல் நிலையத்தில் பவானி புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், இறால் பண்ணையில், சிவராஜுடன் பணிபுரிந்து வந்த மேற்கு வங்காள மாநிலம்- கொல்கத்தாவைச் சேர்ந்த உத்தம்(42), தேவ் பிரசாத் (18) ஆகிய இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சிவராஜுக்கும், உத்தம் மற்றும் தேவ் பிரசாத்துக்கும் இடையே பணப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் உத்தம், தேவ் பிரசாத் ஆகிய இருவரும் சேர்ந்து, சிவராஜை இரும்பு ராடால் அடித்து கொலை செய்து, இறால் பண்ணையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று மாலை போலீஸார், இறால் பண்ணைக்கு விரைந்து, அங்கு கொலை செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த சிவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகவே, சிவராஜ் காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றிய காட்டூர் போலீஸார், உத்தம் மற்றும் தேவ் பிரசாத் ஆகிய இருவரை கைது செய்தனர்.