மெரினாவில் போலீஸாரிடம் அநாகரிகமாக நடந்த 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி


சென்னை: மெரினாவில் நள்ளிரவில் போலீஸாரிடம் அநாகரிகமாகவும், மிரட்டும் வகையிலும் நடந்து கொண்ட ஆண் மற்றும் அவரது தோழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை மெரினா உட்புற சாலையில் கடந்த அக்டோபர் 20-ம் தேதி நள்ளிரவில் ரோந்து சென்ற மயிலாப்பூர் போலீஸார், அங்கு நிறுத்தியிருந்த காரை எடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால், காரில் வந்த வேளச்சேரி சந்திரமோகன், அவரது தோழி மயிலாப்பூர் தனலட்சுமி ஆகிய இருவரும் அநாகரிகமாகவும், மிரட்டும் வகையிலும் போலீஸாரிடம் பேசினர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியது. போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது.

அப்போது, இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல் துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

x