செல்போனில் சத்தமாக பேசியதால் தகராறு: மணிப்பூர் இளைஞர் கொலை - சகோதரர் கைது


சென்னை: திருவான்மியூரில் மணிப்பூர் இளைஞர் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூர், மருந்தீஸ்வரர் நகரில் உள்ள வீட்டின் 2-வது தளத்தில் செந்தில்வேலன் (47) என்பவர் வசிக்கிறார். இவரது வீட்டின் தரை தளத்தில் மணிப்பூரைச் சேர்ந்த ரபேகா, அவரது ஆண் நண்பர் அதே மாநிலத்தைச் சேர்ந்த பவுமிலியன் (28) மற்றும் பவுமிலியனின் சகோதரர் காய்சுவலியன் (32) ஆகியோர் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.

ரபேகா கடந்த 20 நாட்களுக்கு முன் அவரது ஊருக்கு சென்றுள்ளார். பவுமிலியன் மற்றும் காய்சுவலியன் ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் குடிபோதையில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (3-ம் தேதி) காலை மது போதையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அப்போது காய்சுவலியன், பவுமிலியனை அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த பவுமிலியன் அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து, மார்பில் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த காய்சுவலியனை அருகிலிருந்தவர்கள் மீட்டு அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த திருவான்மியூர் காவல் நிலைய போலீஸார் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், காய்சுவலியன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக பவுமிலியனை கைது செய்தனர்.

செல்போனில் சத்தமாக பேசியதால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x