மதுராந்தகம் அருகே சாலை விபத்து: உதவி ஆய்வாளர் உட்பட 2 பெண் போலீஸார் உயிரிழப்பு


ஜெய்ஸ்ரீ , நித்யா

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் நேற்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, பின்னால் வந்த கார் மோதியதில் சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெய்ஸ்ரீ, காவலர் நித்யா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

சென்னையை, அடுத்த மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜெய்ஸ்ரீ (38). காவலராக பணிபுரிந்து வந்தவர் நித்யா(33). மேற்கண்ட இருவரும், நேற்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, மதுராந்தகத்தை அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் இவர்களின் வாகனத்தின் மீது, பின்னால் வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த காவலர் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், எஸ்ஜயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் நித்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தியதாக கார் ஓட்டுநர் மதன்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகனத்தில் தொலை தூரம் பயணம் இந்நிலையில்,ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த எஸ்ஐ ஜெய்ஸ்ரீ மதுரையைச்சேர்ந்தவர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்காவலர் நித்யா.காவலர் நித்யா கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை விடுப்பில் உள்ளார்.

மேலும், உயிரிழந்த இரண்டு போலீஸாரும் இருசக்கர வாகனத்தில் தொலை தூரம் பயணம் செய்யும் பழக்கம் கொண்டவர்கள். அண்மையில் எஸ்ஐ ஜெய்ஸ்ரீ இருசக்கரவாகனத்தில் லடாக் சென்று திரும்பியவர்.அதனால்,வாகன விபத்தில் உயிரிழந்த இருவரும் அலுவல் பணி நிமித்தமாக செல்லவில்லை’என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x