சிவகங்கை: மதுரையில் மனைவி, மாமியாரை வெட்டிவிட்டு சிவகங்கை அருகே அதிமுக நிர்வாகியை வெட்டி கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே நாட்டாகுடியைச் சேர்ந்தவர் குண்டுமணி (25). இவரது மனைவி பவித்ரா (21). ஒன்றரை வயதில் பெண்குழந்தை உள்ளது. குடும்பப் பிரச்சினை காரணமாக தனது குழந்தையுடன் பவித்ரா, மதுரை கூடல்புதூர் பாரதிதாசன் காலனியில் தாயார் கருப்பாயியுடன்(65) வசித்து வருகிறார்.:
சாலையில் சென்றவருக்கு வெட்டு: இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மதுரைக்குச் சென்ற குண்டுமணி தனது மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டினார். தொடர்ந்து அங்கிருந்து நாட்டாகுடி வந்த குண்டுமணி, அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற பாலு (55) என்பவரை காலில் வெட்டினார். அவர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் வீட்டின் முன், கோலமிட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரை அரிவாளுடன் விரட்டவே. அவர் வீட்டுக்குள் ஓடி தப்பினார். இதற்கிடையே, அதிமுக கிளைச் செயலாளரான கணேசன்(70), தனது கடையை திறக்க வந்தபோது அவரை குண்டுமணி வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தார். இதைக் கண்டு ஊர் மக்கள் விரட்டியதும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் குண்டுமணி தப்பினார்.
அதிமுகவினர் போராட்டம்: கொலை நடந்த இடத்துக்குவந்த மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் மற்றும் திருப்பாச்சேத்தி போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் அக்கட்சியினர், உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற் கிடையே தலைமறைவாக இருந்த குண்டு மணியை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ஒரு மாதத்துக்கு முன்பு நாட்டாகுடியில் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்கு சில வாரங்களுக்கு முன்கோயிலில் இருந்த சிலையை காணவில்லை. பின்னர் புது சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினர். சிலை காணாமல் போனதில் குண்டுமணி மீது சந்தேகம் ஏற்பட்டு கிராம மக்கள் விசாரித்தனர். இந்த ஆத்திரத்தில் கண்ணில் பட்டவர்களை வெட்டியிருக்க வாய்ப்புள்ளது. மதுரையில் வெட்டுப்பட்டு காயமடைந்த மனைவி, மாமியார் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கூடல் புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
டிஎஸ்பி நிரேஷ் கூறும்போது, ‘‘குற்றவாளி குண்டுமணி கொலை செய்துவிட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வீட்டுக்கு சரியாக குடிநீர் வரவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இதன்மூலம் அவர் மனக்குழப்பத்தில் இருப்பதுபோல் தெரிகிறது. இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்’’ என்றார்.
காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்: அதிமுக நிர்வாகி கொலை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை திருப்பாச்சேத்தி காவலர் ராஜா தடுத்து ஒருமையில் பேசினார். இதனால் செய்தியாளர்களுக்கும் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களுக்கு ஆதரவாக கிராம மக்களும் வாக்குவாதம் செய்தனர். அதைத் தொடர்ந்து, செய்தி சேகரிக்க அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், காவலர் ராஜாவை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தர விட்டார்.