காஞ்சிபுரம்: மாங்காட்டில் மதுபோதைக்கு அடிமையான மகன் பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அருகே உள்ள அம்பாள் நகர், பாலாஜி அவென்யூவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (75). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தட்சிணாமூர்த்தியின் மகன் குமரன் (38), மதுபோதைக்கு அடிமையானவர். இதனால், குமரனின் மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். ஆகவே, தந்தை, மகன் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், நாள் தோறும் குமரன் மதுபோதையில் வீட்டுக்கு வந்து, தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில், இன்று காலை மதுபோதையில் இருந்த குமரன், தந்தை தட்சிணாமூர்த்தியிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி வீட்டில் இருந்த பீர் பாட்டில் மற்றும் இரும்பு கம்பியால் குமரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த மாங்காடு போலீஸார், தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.