திருப்போரூர்: திருப்போரூரில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகனம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து பள்ளத்தை மூடாமல் அஜாக்கிரதையாக விட்ட பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நிவாரண உதவி வழங்கவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சியின் குடிநீர் தேவைகளுக்காக திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலை ஒட்டி சிறுதாவூர் பகுதியில் 5 குடிநீர் கிணறுகள் உள்ளன. இங்கிருந்து குழாய்கள் மூலமாக பேரூராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், சாலை விரிவாக்கப் பணிகளால் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆமூர் - சிறுதாவூர் இடையே உள்ள தென்னந்தோப்பு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து புதிதாக குடிநீர் குழாய்கள் பதிக்க சில நாட்களுக்கு முன் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது.
பள்ளம் தோண்டிய மண்ணானது சாலையிலேயே கொட்டிவைக்கப்பட்டிருந்தது. குழாய் பதிக்கும் வேலை முடிந்த பிறகும் அந்த பள்ளத்தை மூடாமலே விட்டுவிட்டனர். அந்தப் பகுதியில் எந்த ஒரு எச்சரிக்கைத் தடுப்பும் அமைக்கப்படவில்லை. ஆமூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவராஜ் - சங்கீதா தம்பதி. இவர்களுக்கு 2 மற்றும் 1 வயதில் இரண்டு மகன்கள். இந்தக் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்காக, தீபாவளி அன்று மாலை 6:30 மணியளவில் தேவராஜும் சங்கீதாவும் பைக்கில் திருப்போரூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, மேற்கண்ட குடிநீர் குழாய் பள்ளத்தின் அருகே குவித்துக் கிடந்த மண் மேட்டில் இவர்களின் பைக் மோதி அருகே இருந்த பள்ளத்தில் நான்கு பேரும் பைக்குடன் விழுந்தனர். இதில், தேவராஜ் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். சங்கீதாவுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர்களின் 1 வயது மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 2 வயது மோகித்துக்கு தலை, கை, கால் என உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் இவர்கள் அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், குழந்தை மோகித் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 5:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி குழந்தை மோகித் இறந்தார். இன்று சங்கீதாவுக்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் குழந்தை இறந்ததால் தள்ளிவைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்தும், குழந்தை இறந்தது குறித்தும் திருப்போரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே விபத்து நடந்த மறுநாள், தோண்டப்பட்ட பள்ளமானது அவசரமாக மூடப்பட்டது. இதையடுத்து, பள்ளத்தை மூடாமல் அஜாக்கிரதையாக இருந்த சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு சரியான நடவடிக்கை இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.