மத்தியப் பிரதேசம்: பண்டர்ணா மாவட்டத்தில் கடிகாரத்தை திருடிய குற்றத்துக்காக 14 வயது சிறுவர்கள் இருவரை தலைகீழாக தொங்கவிட்டு அடித்து, மிளகாய் புகையை அவர்களை சுவாசிக்க செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் அக்டோபர் 31 அன்று நடந்தபோதும், இச்சம்பவத்தின் வீடியோ நேற்று வைரலாகிய பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது.
பண்டர்ணா மாவட்டத்தின் மோஹ்கான் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர், உள்ளூரில் உள்ள ஒரு வீட்டிற்கு கடனுக்கு தயிர் வாங்கிய பணத்தை திருப்பித் தருவதற்காக சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் அந்த வீட்டிலிருந்து ஒரு கடிகாரத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் தாங்கள் செய்த தவறை உணர்ந்த அவர்கள், அமைதியாக கடிகாரத்தை அதை திருடிய இடத்திலேயே வைத்துவிட்டனர். இருப்பினும், அதே கிராமத்தைச் சேர்ந்த நிகில் கலாம்பே மற்றும் சுரேந்திர பவங்கர் ஆகியோர், சிறுவர்கள் கடிகாரத்தைத் திரும்ப வைத்ததை பார்த்தனர். இதனையடுத்து அவர்கள் சிறுவர்களை டிராக்டர் கொட்டகைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, திருட்டு பற்றி அவர்களிடம் கேள்வி எழுப்பி, அவர்களை தலைகீழாக தொங்கவிட்டு அடித்து உதைத்து, பின்னர் மிளகாய் புகை நெடியையும் சுவாசிக்க செய்தனர்.
ஆரம்பத்தில், சிறுவர்கள் இந்த சம்பவம் குறித்து தங்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுரேந்திர பவங்கர் பதிவுசெய்த வீடியோ, வாட்ஸ்அப்பில் பரவத் தொடங்கியது. அந்த வீடியோவை பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் தந்தை பார்த்தார். அதிர்ச்சியடைந்த அவர், தனது மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகாரளித்தார்.
இந்த வழக்கில் நிகில் கலாம்பே, சுரேந்திர பவங்கர் மற்றும் இன்னொரு நபர் ஆகியோரை போலீஸார் தடுத்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பிஎன்எஸ் சட்டத்தில் 137, 2, 140, 3, 115, 35, 127, 2 மற்றும் 75 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.