டேராடூன்: உத்தராகண்டின் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மார்ச்சுலாவில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.
45 இருக்கைகள் கொண்ட பயணிகள் பேருந்து இன்று காலை மார்ச்சலாவில் இருந்து குமாவோனுக்குச் சென்றபோது, மார்ச்சுலாவில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்தது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் மற்றும் மாநில மீட்புப் படை, மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ‘அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலாவில் நடந்த பேருந்து விபத்தில் பயணிகள் உயிரிழந்தது குறித்து மிகவும் சோகமான செய்தி வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவாக நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நிர்வாகம் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் குழுக்கள் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல விரைவாக செயல்படுகின்றன. தேவைப்பட்டால் பலத்த காயமடைந்த பயணிகளை விமானம் மூலம் சிகிச்சைக்கு அனுப்பவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் ஆர்டிஓ அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் உதவியை அவர் அறிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.