வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா, போதை ஊசி விற்ற 3 பேர் கைது


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் பலர் அதே பகுதியில் தங்கியுள்ளனர். இங்கு மர்ம நபர்கள் சிலர் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி ஆகியவற்றை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது ஸ்ரீபெரும்புதூர் சுபத்ரா நகர் பகுதியில் 3 பேர் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி மருந்து விற்றது தெரியவந்தது. அவர்கள் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீஸார் விரட்டிப் பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா, போதை ஊசி, மாத்திரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த காமேஷ் (23), பாடிச்சேரி காமராஜர் தெருவைச் சேர்ந்த சூர்யா (24), அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (26), என்பது தெரியவந்தது. அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

x