சென்னை: அமைந்தகரையில் 15 வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கொலை தொடர்பாக நெஞ்சை பதைபதைக்க வைக்கும் பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை அமைந்தகரை, மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முகமது நிஷாத் (36). இவரது மனைவி நிவேதா என்ற நாசியா (30). இவர்கள், அவர்களது வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ள தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை பணிக்கு அமர்த்தி இருந்தனர். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முகமது நிஷாத் வீட்டின் குளியல் அறையில், சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக அமைந்தகரை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சிறுமியின் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்ததால் சிறுமி, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முகமது நிஷாத் சிறுமியை தாக்கியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கில் முகமது நிஷாத், அவரது மனைவி நாசியா, முகமது நிஷாத்தின் நண்பர் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ் (26), அவரது மனைவி ஜெயசக்தி (24), முகமது நிஷாத்தின் சகோதரி அடையாறில் வசிக்கும் சீமா பேகம் (39), கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த வேலைக்கார பெண் மகேஸ்வரி (40) ஆகிய 6 பேரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
சிறுமி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சிறுமியின் தாய் - தந்தை கோவை தென்னம்பாளையத்தில் மில் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். 3 சகோதரர்களும் நெல் அறுவடை இயந்திர ஆபரேட்டராகவும், சகோதரி மில் தொழிலாளியாகவும் உள்ளனர். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சிறுமியின் பெற்றோர், தங்கள் 15 வயது மகள், 3 வேளை சாப்பிடவாவது செய்யட்டும் என்ற எண்ணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வீட்டு வேலைக்காக முகமது நிஷாத் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சம்பளம் கிடையாது. மாறாக பின்னாளில் சிறுமிக்கு திருமணம் நடக்கும்போது, முகமது நிஷாத் தன்னால் இயன்ற அளவு நகை அல்லது பணம் கொடுக்க வேண்டும் என வாய்மொழி ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாம்.
முகமது நிஷாத் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர் குடும்பத்தினர் சிறுமியை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில் அடிக்கடி அடித்து சித்ரவதை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் அயன் பாக்ஸ், சிகரெட்டால் சூடு வைத்துள்ளனர். சம்பவத்தன்று சிறுமி அழகாக இருந்ததால் அதையும், அவரது குடும்ப நிலையையும் ஒப்பிட்டு ஏளனம் செய்து சிறுமியை அடித்து உதைத்துள்ளனர். இதில், நிலைகுலைந்து கீழே சரிந்த சிறுமி கழுத்தில் சிறிய வகை தண்ணீர் டியூப்பை சுற்றி இழுத்துச் சென்று குளியல் அறையில் போட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதனால், சிறுமி அங்கேயே இறந்துள்ளார். பின்னர் என்ன செய்வது என தெரியாமல் தவித்த நிஷாத் தரப்பினர் சடலத்தின் துர்நாற்றம் வீசாமல் இருக்க வாசனை திரவியத்தை தெளித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுமேலும் பல தகவல்கள் வெளிவர லாம். இவ்வாறு தெரிவித்தனர்.
இதனிடையே, வழக்கின் தீவிரம் கருதி இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். இதுதவிர வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது