பொன்னேரி: சென்னை - மணலி அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த 3 சாலை விபத்துகளில் தந்தை, மகன் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை- மணலி புதுநகர் அருகே உள்ள வெள்ளிவாயல்சாவடி பகுதியை சேர்ந்தவர் வினோத்(23). இவர் ஞாயிறு (நவ.03) காலை திருவொற்றியூர் -சத்தியமூர்த்தி நகரில் இருந்து, தன் நண்பர் கிரண் (23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெள்ளிவாயல்சாவடிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் சைக்கிள், மணலி அருகே சாத்தங்காடு - மணலி விரைவு சாலையில், பக்கிங்காம் கால்வாய் அருகே திரும்பிய போது எதிரே வந்த தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால், வினோத், கிரண் ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, லாரியின் டயரில் சிக்கி படுகாயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கிரண், 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் முகமதலி (30). ஏசி மெக்கானிக்கான இவர் ஞாயிறு (நவ.03) காலை மோட்டார் சைக்கிளில் மாதவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர், மணலி அருகே திருவொற்றியூர் - பொன்னேரி நெடுஞ்சாலையில் சென்ற போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியது. இதில், படுகாயமடைந்த முகமதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை, எண்ணூர்- வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்கிற டேனியல் (40). பெயிண்டரான இவர், அம்பத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு தன் மனைவி ஸ்டெல்லா (30), மகன் மோசஸ் (10), மகள் ஸ்வீட்டி (8) ஆகியோருடன் சென்று விட்டு ஞாயிறு மதியம் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, மணலி அருகே சாத்தங்காடு பகுதியில், மணலி விரைவு சாலையில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது மோதியது. இதில், சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த டேனியல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோசஸ் திருவெற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஸ்டெல்லா, ஸ்வீட்டி ஆகிய இருவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவங்கள் குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.