சிவகங்கை: சிவகங்கை அருகே பைனான்சியர் கொலை வழக்கில் 5 பேரிடம் போலீஸார் விசாரித்து வரு கின்றனர்.
கீழவாணியங்குடி கீழத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். தீபாவளி அன்று இவரையும், இவரது நண்பர்கள் அருண்குமார், ஆதிராஜன் ஆகியோரையும் ஒரு கும்பல் வாளால் வெட்டியது. இதில் மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸார் வழக்கு பதிந்தனர்.
சிவகங்கை அருகே களத்தூரைச் சேர்ந்த சிங்கத்துரை மனைவி லெட்சுமி (60). வீட்டில் தனியாக இருந்த இவரை, தீபாவளி அன்று சிலர் கழுத்தறுத்து கொலை செய்தனர். சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த 2 கொலைகளையும் ஒரே தரப்பினர் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, குற்றவாளி களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், மணிகண்டன் கொலை தொடர்பாக 5 பேரை பிடித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தீபாவளி அன்று மணிகண்டன் தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனங்களில் வேகமாகச் சென்றுள்ளார். இதை தட்டிக்கேட்டவரை அவர்கள் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டவர் தனது நண்பர்களை அழைத்து வந்து கொலை செய்துள்ளார். இந்த கொலையில் 14 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களை பிடித்தால்தான் மூதாட்டி கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.