சகோதரியுடன் பழகிய நண்பரை கூலிப்படையினருடன் சேர்ந்து கொலை செய்தவர் கைது


சரவணன்

ராமநாதபுரம்: தொண்டியில் சகோதரியுடன் பழகி வந்த நண்பரை, கூலிப் படையினருடன் சேர்ந்து கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் முத்துக்குமார் (29). சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் மகன் சரவணன் (29). நண்பர்களான இவர்கள் இருவரும், பல்வேறு ஊர்களுக்கு சென்று ராட்டினம், விளையாட்டு சாதனங்கள் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். தீபாவளியையொட்டி தொண்டி அருகே நம்புதாளையில் முத்துக்குமாரும், தொண்டி மகாசக்திபுரத்தில், சரவணனும் ராட்டினம் அமைத்திருந்தனர்.

இதில் கணவரை பிரிந்து வாழும் சரவணனின் சகோதரி யசோதைக்கும், முத்துக் குமாருக்கும் 7 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. தனது சகோதரியுடனான பழக்கத்தை கைவிடுமாறு முத்துக்குமாரை பல முறை சரவணன் கண்டித்தார். ஆனாலும், முத்துக்குமார் அப்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனால் தனது சகோதரி வாழ்க்கை சீரழிந்ததற்கு முத்துக்குமார்தான் காரணம் என சரவணன் முன் விரோதத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நம்புதாளையில் ராட்டினத் தொழிலில் ஈடுபட்டிருந்த முத்துக்குமாரை சரவணன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர். அவர்களை தடுக்க வந்த முத்துக்குமாரின் தாய் சசிகலாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக சரவணன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சிவகங்கை ராஜா, திருவாடானையைச் சேர்ந்த அஜித், பாலு, சிவகங்கை அரண் மனைத் தெருவைச் சேர்ந்த கலை, திருவாடானை அருகே கடம்பாகுடியைச் சேர்ந்த சொக்கு என்ற உலகநாதன் ஆகிய 6 பேர் மீது தொண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சரவணனை கைது செய்தனர். தலைமறைவான மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.

x