காங்கயம்: காங்கயம் பொத்திபாளையம் தளிஞ்சிக் காட்டுப்புதூரை சேர்ந்தவர் சுப்புக்குட்டி. கடந்த 30-ம் தேதி வீட்டில் இவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. எழுந்து பார்த்தபோது, வீட்டின் கதவை திறக்க மர்ம நபர் முயற்சித்துக் கொண்டிருந்தார்.
இதையடுத்து சுப்புக்குட்டி சத்தமிட்டதால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் விழித்துக் கொண்டனர். இதையறிந்த மர்ம நபர் அந்த இடத்தில் இருந்து மாயமானார். இந்நிலையில் மறுநாள் காலை சுப்புக்குட்டி வீட்டின் அருகே இருந்த கிணற்றுக்குள் இருந்து சத்தம் வந்தது. சுப்புக்குட்டி பார்த்தபோது, கிணற்றுக்குள் ஒருவர்உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலின்பேரில், காங்கயம் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, கிணற்றில் இருந்த நபரை மீட்டு விசாரித்தனர். அந்நபர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (46) என்பதும், சுப்புக்குட்டி வீட்டில் திருடவந்ததும் தெரியவந்தது.
மேலும், பொதுமக்கள் திரண்டதால் தப்பியோடும்போது, கிணற்றில் தவறி விழுந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து, சக்திவேலை திருப்பூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீஸார் பாதுகாப்புடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.