மறைமலை நகர் அருகே அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு: லேப்டாப், செல்போன்கள் கொள்ளை


செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோயில் அருகே தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்களின் 5 வீடுகளில் அடுத்தடுத்து தொடர் திருட்டு நடைபெற்றது. இது தொடர்பாக மறைமலை நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள பெரிய விஞ்சியம்பாக்கம் துலுக்காத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (36). இவர் அதே பகுதியில் 2 மாடி கொண்ட 8 வீடுகள் கட்டி, மகேந்திரா சிட்டியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் பெண்களுக்கு மாத வாடகைக்கு விட்டுள்ளார். அதில் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 29 இளம் பெண்கள் தங்கி மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த 30ம் தேதி சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இந்நிலையில் அபார்ட்மென்டில் இரண்டாம் மாடியில் குடியிருக்கும் சுபத்ரா என்பவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்புற பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. லேப்டாப், இரண்டு செல்போன்கள் திருடப்பட்டு இருப்பதாக வீட்டின் உரிமையாளர் நரசிம்மனிடம் தெரித்தார். மேலும் அபார்ட்மென்டில் 5 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதையும் தெரிவித்தார். இது தொடர்பாக நரசிம்மன் மறைமலைநகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனே மறைமலைநகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்த போது அதில் ஒரு வீட்டில் மட்டும் ஒரு லேப்டாப், 2 செல்போன்கள் திருடுப்போனது தெரிய வந்தது.

மற்ற 4 வீட்டின் உரிமையாளர்கள் சொந்த ஊரிலிருந்து வீடு திரும்பிய பிறகு அவர்களது வீட்டில் எந்தெந்த பொருட்கள் திருடு போனது என்பது பின்னர் தெரிய வரும். இதுகுறித்து மறைமலைநகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸார் கை ரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும, திருட்டு நடந்ததை பற்றி முறையாக விசாரிக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

x