கேரளா: பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
பாலக்காடு அருகே உள்ள பாரதப்புழா ஆற்றின் மேல் அமைந்துள்ளது சொர்ணூர் ரயில்வே பாலம். இந்தப் பாலத்தில் தூய்மைப் பணி நடந்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் தொழிலாளர்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த கொடூர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 ஒப்பந்த தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முதல்கட்ட விசாரணையில், ரயில் மோதியதில் விழுப்புரத்தைச் சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி உள்பட 4 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரது உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த 4 பேரும் கேரளாவில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.