வண்டலூர்: வண்டலூர் கிரசன்ட் கல்லூரியில் 6-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத்தைப் பிரிந்து தனியாக இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்
திருச்சி கே.கே.நகர் மகாலட்சுமி நகர் 3 வது தெருவை சார்ந்தவர் தமீம், இவரது மனைவி ரியாதா பேகம். இவர்களது மகன் முகமது உமர் (20) . தாய், தந்தை மற்றும் தங்கை ஷீபா ஆகியோர் துபாயில் வசித்து வருகின்றனர். உமர் வண்டலூரில் உள்ள அப்துல் ரகுமான் கிரசன்ட் கல்லூரியின் விடுதியில் தங்கி அங்கேயே மூன்றாம் ஆண்டு பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரியில் தங்கிய பல மாணவர்கள் தங்களது ஊருக்கு சென்று விட்டனர் . உமரின் குடும்பத்தார் துபாயில் இருப்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊருக்கு செல்ல முடியாமல் விடுதியில் தங்கி இருக்கிறார். இதனால் மன உளைச்சலில் இருந்ததாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை தான் தங்கியிருக்கும் விடுதியின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காலை 4 மணி அளவில் கல்லூரி காவலாளிகள் உமர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் கிளாம்பாக்கம் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது மூன்று மணிக்கு மேல் ஆறாவது மாதிரி இருந்து குதிப்பது பதிவாயிருந்தது. மேலும், அவரது அறையை சோதனை செய்தபோது ஒரு கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில் குடும்பத்தை விட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக தனியாக இருப்பதால் மன உளைச்சல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மன உளைச்சல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என போலீஸார் தெரிவித்தனர். இதையே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மன உளைச்சலில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவரம் கல்லூரி வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.