காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் எலக்ட்ரீசியன் ஒருவர் வீட்டில் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் தாசபிரகாஷ். எலக்ட்ரீசியனாக வேலைப் பார்த்து வரும் இவர், தனது மனைவி ராதா மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் புஞ்சை அரசன் தாங்கள் பகுதியில் அங்காளம்மன் நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது குடும்பத்தினருடன் மேல்மலையனூர் கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். குடும்பத்தினருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பியபோது, கடப்பாரையால் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகள், 500 கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசுகள், 35ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட 19 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த தாசபிரகாஷ் காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்காக வெளியூர் சென்றிருந்த போது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறிந்து அந்தப் பகுதி மக்கள் கூறும் போது, மாநகராட்சிக்குட்பட்ட இந்தப் பகுதி மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது. இந்தப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. அவ்வப்போது இந்த பகுதியில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற சம்பவம் நடக்கிறது. காவல்துறையினர் இந்த பகுதியில் தொடர்ந்து ரோந்து வர வேண்டும் என்றனர்.