சாக்லேட் தருவதாக ஏமாற்றி 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: உறவினர் கைது


ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் நேற்று 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

திருப்பதியில் 3 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அவரை ஏமாற்றி, சிறுமியின் மாமா அருகில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டு அப்பகுதியில் உடலை புதைத்துள்ளார்.

சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் தேடி, இறுதியில் போலீஸில் புகாரளித்தனர். விசாரணையில், குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். கொல்லப்பட்ட சிறுமியின் மாமாவான குற்றவாளி, குழந்தை வசித்த அதே காலனியில் வசிக்கிறார்.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பதி எஸ்.பி சுப்பாராயுடு கூறுகையில், “குழந்தையின் மாமா குற்றவாளி என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். சாக்லேட் வாங்க அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் ரூரல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று கூறினார்.

x