கோவை அருகே வீட்டுப் பூட்டை உடைத்து 100 பவுன் தங்க, வைர நகைகள் திருட்டு


திருட்டுச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் விசாரணை நடத்திய காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் போலீஸார்.

கோவை: கோவை அருகே வீட்டுப் பூட்டை உடைத்து 100 பவுன் தங்க, வைர நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை கோவில்பாளையம் அருகேயுள்ள வழியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (56). விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுதா. இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் உள்ள புரவிபாளையத்தில் இவர்களுக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. பாலசுப்பிரமணியன் - சுதா தம்பதியர் சில நாட்களுக்கு ஒருமுறை தோட்டத்துக்குச் சென்று வருவர். அதன்படி, நேற்று (அக்.31) தீபாவளியை கொண்டாடிய பின்னர் பாலசுப்பிரமணியன் - சுதா தம்பதியர் வீட்டைப் பூட்டிவிட்டு, பொள்ளாச்சி புரவிபாளையத்தில் உள்ள தோட்டத்துக்கு வீட்டுக்குச் சென்றார்.

பின்னர், நேற்று (அக்.31) இரவு பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவுப் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் கலைந்து கிடந்தன. வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, உருண்டை சங்கிலி, கம்மல், மோதிரம், பிரேஸ்லெட், வளையல், நெக்லஸ், வைர வளையல், வைரக் கம்மல் என 100 பவுன் தங்க, வைர நகைகளை காணவில்லை. வீ்ட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மேட்டுப்பாளையம் டிஎஸ்பி (பொறுப்பு) சிவகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


x