செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி அருகே குளிக்கச் சென்றபோது குளத்து நீரில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் இருவர் இன்று மாலை உயிரிழந்தனர்.
தாழம்பூர் அண்ணா தெருவை சேர்ந்த ராஜா, மகன் ஸ்ரீசுதன் (13), அதே பகுதியை சேர்ந்த அற்புதராஜ் என்பவரின் மகன் எஸ்வந்த் (12). இருவரும் அதே பகுதியில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தனர். இந்நிலையில் இன்று மாலை செம்மஞ்சேரி காந்தி நகரில் உள்ள வாழ்வெட்டி தாங்கல் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்றனர். அப்போது, குளித்துக் கொண்டிருந்த இருவரும், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினார்.
குளத்து கரையில் அமர்ந்திருந்த மற்ற சிறுவர்கள் இதனை கண்டு கூச்சலிட்டனர். அங்கு மீன் பிடிப்பவர்கள் இதனை கண்டு குளத்தில் குதித்து சிறுவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவர்களை பரிசோதித்தபோது அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த செம்மஞ்சேரி காவல் நிலைய போலீஸார், சிறுவர்களிடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.