குடிபோதையில் ஆபாசமாக பேசியவர்களை தட்டிக்கேட்ட தொழிலாளி குத்திக் கொலை - 2 பேர் கைது


கரூர்: குடிபோதையில் ஆபாசமாக பேசியவர்களை தட்டிக்கேட்ட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டடார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையத்தை அடுத்த கருப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிரவன் (24). இவர் கரூரில் உள்ள டெக்ஸில் வேலை பார்த்து வருகிறார். மேட்டுபாளையம் பகவதி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் (கடந்த அக்.30ம் தேதி) இரவு கதிரவனும் அவர் நண்பர்கள் சிவநேசன், ராகுல், நிதிஷ் ஆகியார் அமர்ந்திருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவர் குடிபோதையில் சத்தமாக, அங்கிருந்தவர்களை ஆபாசமாக பேசிவிட்டு சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கதிரவனும், அவரது நண்பர்களும் இருசக்கர வாகனத்தில் அவர்களை துரத்தி சென்று கரூர்- நாமக்கல் சாலையில் வேலாயுதம்பாளையம் சர்வீஸ் சாலை அருகே தனியார் கட்டிட வளாகம் அருகே மடக்கி தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகரை சேர்ந்த விஸ்வேஸ்வரன் கதிரவனை பிடித்துக் கொள்ள நாமக்கல் மாவட்டம் மோகனூர் யோகேந்திரன் மகன் கிஷோக் (19) கதிரவன் நெஞ்சில் கத்தியால் குத்தி, மிரட்டிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகினர்.

இதையடுத்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கதிரவனை சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து கதிரவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்குப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இன்று (நவ. 1ம் தேதி) கிஷோக் மற்றும் விஸ்வேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

x