மதுரை: மதுரையில் குழந்தையை வளர்க்கும் போட்டியில் மெக்சிகோ பெண்ணை கொலை செய்து எரித்த வழக்கில் ஆண் நண்பருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை 4 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவை சேர்ந்தவர்கள் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் (52), செசில்லா அகஸ்டா (36). இவர்கள் கணவன் - மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு, அடில்லா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் இருவரும் பிரிந்ததாக தெரிகிறது. குழந்தை தந்தை பராமரிப்பில் இருந்துள்ளது. செசில்லா அகஸ்டா அவ்வப்போது வந்து குழந்தையை பார்த்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை முதல் மார்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். பல்கலைக்கழக குடியிருப்பில் தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். அந்த நேரத்தில் செசில்லா அகஸ்டா, கேரள மாநிலம் திருச்சூரில் தங்கி மோகினி ஆட்டம் கற்று வந்துள்ளார். மேலும், திருச்சூரிலிருந்து விருதுநகர் வரை வந்து அடிக்கடி தனது குழந்தையை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு ஏப்.9ம் தேதி அகஸ்டா குழந்தையை பார்க்க வந்துள்ளார். அப்போது குழந்தையை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாக மார்டினிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அகஸ்டா கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் டிராவல்பேக்கில் வைக்கப்பட்ட மதுரை ஆஸ்டின்பட்டி தோப்பூர் கண்மாய் ரோட்டில் எரிக்கப்பட்டது.
இது தொடர்பாக மார்டினை மதுரை திடீர் நகர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மார்டினுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் 2020ம் ஆண்டு செப்.11-ல் தீர்ப்பளித்தது. இதை ரத்து செய்யக்கோரி மார்டின் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு தற்போது மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திக்கேயன், ஆர்.பூர்ணிமா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: "மார்டின், குழந்தை, அகஸ்டா ஆகியோர் 5 நாட்கள் ஒன்றாக இருந்துள்ளனர். குழந்தை மீது யாருக்கு உரிமை உள்ளது என்பதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அகஸ்டா கொல்லப்பட்டுள்ளார். அவரை மனுதாரர் திட்டமிட்டு கொலை செய்யவில்லை.
திடீர் ஆத்திரம் காரணமாக மனுதாரர் தாக்கியதில் இறப்பு நிகழ்ந்துள்ளது. எனவே மனுதாரருக்கு கொலை பிரிவில் ஆயுள் தண்டனையை வழங்கியது செல்லாது. ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.