தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. தீபாவளி பண்டிகையானது நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்து ஏராளமான பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தில், தாம்பரம், பள்ளிக்கரணை என இரண்டு காவல் மாவட்டங்கள் உள்ளன. இந்த காவல் மாவட்டங்களில், தீபாவளி தினத்தன்று நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், தாம்பரத்தில் 34, பள்ளிக்கரணையில் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் சுமார் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.