உத்தரப்பிரதேசம்: சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் பகுதியில் இரண்டு குழந்தைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மாந்திரீக சடங்கில் தங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தியோபந்த் பகுதியில் உள்ள பாயல் கிராமத்தைச் சேர்ந்த தேவ் (11) மற்றும் அவரது 9 வயது உறவினர் மஹி ஆகியோர், நேற்று தங்கள் கிராமத்திற்கு வெளியே உள்ள கோயிலுக்குச் சென்றனர். இரவு வெகுநேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால், குடும்பத்தினர் தேடத் தொடங்கினர். நள்ளிரவில், சாலையோரத்தில் இரு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தடயவியல் குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இருவரது உடல்களிலும் எலும்புகள் உடைந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும், இது விபத்தாக இருக்கலாம் என்றும் சந்தேகித்தனர். அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சஹாரன்பூர் காவல் கண்காணிப்பாளர் (கிராமப்புற) சாகர் ஜெயின் தெரிவித்தார்.
இருப்பினும், மாந்திரீக சடங்கின் ஒரு பகுதியாக குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறி, தியோபந்த்-நானோடா சாலையை குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மறித்து போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என காவல்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் உறுதியளித்துள்ளனர்.