கரூரில் அதிர்ச்சி சம்பவம்: தீபாவளி இனாம் கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்


கரூர்: தீபாவளி இனாம் கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் மீது அப்பகுதி இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தும் காட்சி வைரலாகும் நிலையில் தோகைமலை போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் நச்சலூரை சேர்ந்தவர் கண்ணன். இவர் தோகைமலை அருகே வெள்ளப்பட்டியில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இன்பரசு என்பவர் வேலை பார்த்து வருகிறார். வெள்ளப்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி மற்றும் 3 இளைஞர்கள் நேற்று முன்தினம் (அக்.30ம் தேதி) இரவு வெள்ளப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க்-க்கு சென்று இன்பரசுவிடம் தீபாவளி போனஸ் கேட்டு மிரட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 4 பேரும் சேர்ந்து இன்பரசுவை தாக்கி, கீழே தள்ளி மிதித்துள்ளனர்.

இதில் காயமடைந்த இன்பரசு தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பெட்ரோல் பங்க் ஊழியரை சிலர் தாக்குவது கண்டு பெட்ரோல் போட நின்ற வாடிக்கையாளர்கள் அச்சமடைந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து தோகைமலை போலீஸில் கண்ணன் நேற்று அளித்த புகாரின் பேரில், சின்னசாமி உள்ளிட்ட இருவரிடம் போலீஸார் இன்று (நவ. 1ம் தேதி) விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பெட்ரோல் பங்க் ஊழியரை சின்னசாமி உள்ளிட்ட 4 பேர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

x