படப்பை அருகே தீபாவளி கொண்டாட சென்றவர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை


பிரதிநிதித்துவப் படம்

படப்பை: படப்பை அருகே நீலமங்கலத்தில் தீபாவளி கொண்டாட சென்றவர் வீட்டில் 40 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

படப்பை அருகே நீலமங்கலம் காமராஜரை சார்ந்தவர் ரகுநாதன் துபாயில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கங்கேஸ்வரி (49). இவர்களுக்கு ரஞ்சித் குமார் (26) என்ற மகனும், கீர்த்தனா (23) என்ற மகளும் உள்ளனர். ரஞ்சித் குமாரின் மனைவி மாலினி (26) ஆகியோர் தீபாவளியை முன்னிட்டு நேற்று காலை 11 மணியளவில் மாலினியின் தாயார் வீட்டுக்கு தீபாவளி கொண்டாட குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர்கள் கங்கேஸ்வரியைத் தொடர்பு கொண்டு உங்கள் வீடு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதாக தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த கங்கேஸ்வரி, உடனடியாக நீலமங்கலத்தில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில், வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், வீடு முழுவதும் அலங்கோலமாக காட்சி அளித்தது. பீரோவில் இருந்த 40 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பு - மேற்கு தாம்பரம் கடப்பேரியை சேர்ந்தவர் சுமதி (40). நேற்று அதிகாலை 5 மணிக்கு, கடப்பேரி ஜவகர் மருத்துவமனை அருகே நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சுமதியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நான்கு சவரன் செயினை அறுத்துக் கொண்டு அங்கிருந்து மாயமாகினர். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

x