ஒடிசா: புவனேஸ்வரில் திருமணத்தை மீறிய உறவை கண்டறிந்த மனைவியை, காதலிகள் இருவர் உதவியுடன் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி பிரத்யும்ன குமார் தாஸ் என்பவருக்கு உதவிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 28 அன்று பிரத்யும்ன குமார் தாஸ் தனது மனைவி சுபாஸ்ரீ தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி புவனேஸ்வர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், தனது மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தாஸ் போலீஸில் புகார் செய்தார். இதனை போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சுபாஸ்ரீயின் கைகள் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், அளவுக்கு அதிகமாக மயக்க மருந்தை உட்கொண்டதால் அவர் இறந்ததை அறிக்கை உறுதி செய்தது. பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில், பிரத்யும்ன குமார் தாஸை போலீசார் விசாரித்தனர். அவர் இறுதியில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு பெண்களுடன் தொடர்புள்ளதை ஒப்புக்கொண்ட அவர், அவர்களின் உதவியுடன் தனது மனைவியைக் கொன்றதாக கூறினார்.
விசாரணையில், தாஸ் இரண்டு பெண்களுடன் திருமணம் தாண்டிய தொடர்பு வைத்திருந்தார். இவரது விவகாரம் அவரது மனைவிக்கு தெரிந்ததும், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 8 மாதங்களாக சுபாஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், அக்டோபர் 28 அன்று, தாஸ் தனது மனைவி சுபாஸ்ரீயை சமாதானப்படுத்தி தனது தோழி ரோசியின் வீட்டிற்கு வரும்படி கூறினார். இதற்கிடையில், தாஸ் மருந்தகத்தில் பணிபுரிந்த அவரது நண்பரிடமிருந்து மயக்க ஊசி மருந்து வாங்கினார். சுபாஸ்ரீ ரோசியின் வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் சுபாஸ்ரீக்கு இரண்டு மயக்க ஊசிகளை வலுக்கட்டாயமாக செலுத்தினர், இதனால் அவர் உயிரிழந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.