குரோம்பேட்டை: வடமாநில தொழிலாளர்களை தாக்கியவர்களை தடுக்க சென்ற போலீஸாரை தாக்கிய மூன்று பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
குரோம்பேட்டை நேரு நகரில் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில், அங்கு நேற்று மாலை வடமாநில தொழிலாளர்கள் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுற்றுச் சுவரை ஒட்டி கட்சி கொடி கம்பம் ஒன்று கீழே கிடந்துள்ளது. சுற்றுச்சுவர் பணியின் போது அருகே கீழே கிடந்த கொடி கம்பத்தின் மீது சிமெண்ட் பூச்சு பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த சபரிஷ் (32), அஜய் (21), சஞ்சய் (23) ஆகிய மூன்று பேர் கொடி கம்பத்தை எடுத்து வைப்பது தொடர்பாக வட மாநில தொழிலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை தாக்க முயன்றுள்ளனர்.
இது குறித்து சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரோந்து போலீஸார், தமிழன்பன் (25), சுந்தர்ராஜ் (26), ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறை தடுக்க முயன்றுள்ளனர். அப்போது போதையில் இருந்த சஞ்சய் போலீஸாரின் சட்டையை பிடித்து இழுத்து, கையால் தாக்கியுள்ளார். இதில், காவலர் தமிழன்பனுக்கு இடது கன்னத்திலும், காவலர் சுந்தர்ராஜூக்கு வலது கழுத்திலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இது தொடர்பாக சிட்லப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவுச் செய்து காவலர்களை தாக்கிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக காவலர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருப்பது காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. ஆணையர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.