போக்சோ சட்டத்தில் நெல்லை போலீஸ்காரர் கைது - சிக்கியது எப்படி?


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த கலைச்செல்வன்(35). இவர் ஏர்வாடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் ஆனந்த கலைச்செல்வன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவியின் குடும்பத்தினருடன் கலைசெல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று, அவரது குடும்பத்தினருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருக்கும்போதும் அங்கு செல்லும் ஆனந்த கலைச்செல்வன் அவரிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும், அந்த மாணவியிடம் அவரது வீடியோ மற்றும் போட்டோக்களை தனது வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்ப சொல்லியுள்ளார். மாணவியும் விபரீதம் உணராமல் தனது வீடியோ மற்றும் போட்டோக்களை ஆனந்த கலைச்செல்வனுக்கு அனுப்பி உள்ளார்.

மாணவி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த வீடியோக்களை வைத்து ஆனந்த கலைச்செல்வன் அந்த மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் வாங்கி வந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆனந்த கலைச்செல்வனின் தொந்தரவு அதிகரித்ததால் நடந்த சம்பவங்கள் குறித்து மாணவி தனது பெற்றோரிடம்கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தில் ஆனந்த கலைச்செல்வனை கைது செய்தார்.

x