சென்னை | ஹார்டுவேர் கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட இளம் பெண் கைது


சென்னை: ஹார்டுவேர் கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டதாக இளம் பெண் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியில் 5 ஆண்டுகளாக ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் இதிஸ் முகமது. இவரது கடைக்கு கடந்த மாதம் 13-ம் தேதி கத்தியுடன் வந்த ஒரு பெண், தான் ரவுடி ரபீக்கின் மனைவி மோனிகா எனவும், ரபீக் தற்போது சிறையில் இருப்பதால், தான் வந்து கேட்கும் போதெல்லாம் மாமூல் தர வேண்டும் எனவும் மிரட்டிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது.

இதேபோல் கடந்த ஒரு மாதத்தில் 5 முறை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இதிஸ் முகமது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முதல் கட்டமாக ஹார்டுவேர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீஸார், கடைக்கு வந்து மாமூல் கேட்டு மிரட்டியது எண்ணூரைச் சேர்ந்த மோனிகா (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கொடுங்கையூரில் சுற்றித் திரிந்த மோனிகாவை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

x