ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்: பூந்தமல்லி ஆர்டிஓ அலுவலக அதிகாரி, இடைத்தரகருக்கு தலா 3 ஆண்டு சிறை 


புகைப்பட விளக்கம்: கணபதி மற்றும் பாலாஜி

திருவள்ளூர்: வாகன ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் இடைத்தரகருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் முரளி. இவர், தன் வாகன ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க கடந்த 2015-ம் ஆண்டு பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (தெற்கு) விண்ணப்பித்திருந்தார். ஆனால், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க, பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலக (தெற்கு) கண்காணிப்பாளராக இருந்த கணபதி (58) ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து, முரளி அளித்த புகாரின் அடிப்படையில், கணபதியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனையின் படி, 2015-ம் ஆண்டு, இடைத்தரகர் பாலாஜி(40) மூலம் கணபதியிடம் ரசாயண பவுடர் தடவப்பட்ட ரு.2 ஆயிரத்தை லஞ்சமாக முரளி அளித்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணபதியையும், பாலாஜியையும் கைது செய்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், கணபதி, பாலாஜி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறப்பு நீதிபதி மோகன் இன்று தீர்ப்பு அளித்தார். அத்தீர்ப்பில், லஞ்சம் வாங்கிய பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலக (தெற்கு) கண்காணிப்பாளர் கணபதி மற்றும் இடைத்தரகர் பாலாஜி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது

x