ஹைதராபாத்: 30 வயது மகன் இறந்து போனதை அறியாமல், நான்கு நாட்களாக அவரது சடலத்துடன் வயதான, பார்வை குறைபாடுடைய பெற்றோர் வாழ்ந்த சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஹைதராபாத்தின் பிளைண்ட்ஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீஸார் அந்த வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். அவர்கள் வீட்டில் சடலமாக கிடந்த 30 வயது நபரை மீட்டனர்.
இது தொடர்பாக நாகோல் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் தலைமை அதிகாரி சூர்யா நாயக் கூறுகையில், “ வயதான அந்த ஆணும் பெண்ணும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்துள்ளனர். தங்களின் மகனை அவ்வப்போது அழைத்தும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. உணவில்லாமல் குரல்கள் பலவீனமாக இருந்ததால், அவர்களின் சத்தம் அண்டை வீட்டாருக்கும் கேட்கவில்லை. நாங்கள் வீட்டை அடைந்தபோது அந்த வயதான தம்பதியினர் அரை மயக்கத்தில் இருந்தனர். அவர்களை மீட்டு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது.
அந்த தம்பதியரின் மகன் நான்கைந்து நாட்களுக்கு முன்பு தூக்கத்தில் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து நகரின் மற்றொரு பகுதியில் வசிக்கும் அவர்களின் மூத்த மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்