இன்ஸ்டா மூலம் அறிமுகம்: இளம்பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை செய்து  நகை பறிப்பு!


பல்லாவரம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் அவ்வப்போது இன்ஸ்டா கிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் நேரம் செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பல்லாவரத்தைச் சேர்ந்த ஹரீஷ் (24) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசிப் பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஹரிஷ் அந்தப் பெண்ணை நேரில் பார்க்க ஆசையாக உள்ளதாகக் கூறியுள்ளார். அவர் சொன்னதை நம்பிய அப்பெண் அவரது ஆசை வார்த்தைக்கு மயங்கி கடந்த 26ம் தேதி தனது பெற்றோரிடம், தோழியின் பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு செங்கல்பட்டு சென்றுள்ளார்.

அங்கு அவரை எதிர்பார்த்துக் காத்திருந்த ஹரிஷ், அப்பெண்ணை பல்லாவரத்தில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் இரண்டு நாட்கள் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், ஹரிஷ் தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த நிஜாம் மற்றும் சல்மானுக்கு போன் செய்து அங்கு வரவைத்துள்ளார். பின்னர், நண்பர்கள் மூவரும் சேர்ந்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து அப்பெண்ணை பலவந்தமாக அடித்து உதைத்து, அவரது கையில் சிகரெட்டால் சூடு வைத்து, அவர் அணிந்திருந்த தங்கக் கம்மலை பறித்துள்ளனர். அத்துடன் அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டின் பின் நம்பரையும் கேட்டு துன்புறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாத அப்பெண், தான் இருக்கும் லொகேஷனை தனது அண்ணன் அரவிந்தனுக்கு ஷேர் செய்துள்ளார். இதை வைத்து அங்கு சென்ற அரவிந்தன், இதுகுறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே அங்கு விரைந்து சென்ற பல்லாவரம் மகளிர் போலீஸார், அதிரடியாக செயல்பட்டு இளைஞர் ஹரிஷை மடக்கிப் பிடித்தனர். அவரது கஸ்டடியில் இருந்த இளம்பெண்ணையும் மீட்டனர். பின்னர் ஹரீஷை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே போலீஸார் வருவதை முன் கூட்டியே அறிந்த ஹரீஷின் நண்பர்களான நிஜாம் மற்றும் சுல்தான் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களையும் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

“விசாரணையில் அந்த இளம்பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். முழுமையான விசாரணைக்குப் பின் தான் உண்மை தெரிய வரும். மேலும், அப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அதன் முடிவுகள் வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என போலீஸார் தெரிவித்துள்ளனர். இளம் பெண்ணை அடைத்து வைத்து அடித்து உதைத்து சிகரெட்டால் சூடு வைத்து நகையைப் பறித்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x