நொய்டா: பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட என்சிபி தலைவர் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 வயது இளைஞர் இன்று கைது செய்யப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) மாலை ஜீஷன் சித்திக் மற்றும் சல்மான் கானுக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தன. இதுகுறித்து ஜீஷன் சித்திக் அலுவலகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அக்டோபர் 12 அன்று, இதே அலுவலகத்திற்கு வெளியே தசரா விழாவில் பட்டாசு வெடிக்கும் போது பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார்.
போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் மிரட்டல் விடுத்தது குர்பான் என்கிற முகமது தயாப் என்பது தெரியவந்தது. தயாப், ஜீஷன் சித்திக் மற்றும் சல்மான் கானிடம் இருந்து மீட்பு தொகையும் கேட்டுள்ளார். இதனையடுத்து 20 வயதான தயாப், இன்று காலை நொய்டாவின் செக்டார் 39 பகுதியில் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர மேலவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததாகக் கூறி காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜீஷன் சித்திக், அஜித் பவார் தலைமையிலான என்சிபி கட்சியில் அக்டோபர் 25 அன்று இணைந்தார்.
பாபா சித்திக் கொலை வழக்கில் இதுவரை 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவர், சல்மான் கானுடனான நெருங்கிய தொடர்பு காரணமாக பாபா சித்திக்கை கொன்றதாக பொறுப்பேற்றார்.