தெலங்கானா: பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவிகள், நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தின் முத்தாரம் மண்டலத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி பெண்கள் வித்யாலயா குடியிருப்பு பள்ளியில் படிக்கும் 30 மாணவிகள் நேற்று மாலை கடுமையான இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். பள்ளி ஊழியர்கள் உடனடியாக அவர்களை பெத்தப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்செய்தியைக் கேட்டதும் பதற்றமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்தனர். அதே நேரத்தில் அருகிலுள்ள வயல்களில் சமீபத்தில் பூச்சிக்கொல்லி தெளித்தது சுவாச அறிகுறிகளைத் தூண்டியிருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் சந்தேகித்தனர்.
இதனையடுத்து மாவட்ட மருத்துவ அலுவலர் பிரமோத்குமார், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவிகளின் உடல்நிலையை மதிப்பீடு செய்ய நள்ளிரவு வரை மருத்துவமனைக்கு இருந்தனர்.பரவலான சுவாசப் பிரச்சினைகளுக்கு வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் கூறியதாவது, “பள்ளியில் இருந்து 30 மாணவர்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் இப்போது நலமாக உள்ளனர், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இது ஃபுட் பாய்சனா இருந்திருந்தால் வேறு அறிகுறிகள் இருந்திருக்கும்” என்றார். மேலும், பள்ளியில் வழங்கப்படும் அசைவ உணவுதான் மாணவர்கள் நோய்வாய்ப்படுவதற்கு காரணமாக இருந்திருக்குமா என்ற கேள்விக்கு, இது ஃபுட் பாய்சன் இல்லை என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, பள்ளியின் பராமரிப்பு மற்றும் சுகாதாரத் தேவைகளை உள்ளூர் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டி மாணவர் சங்கங்கள் விமர்சித்துள்ளது. ஒப்பந்ததாரர் நடைமுறைகளால் உணவின் தரம் குறைந்துவிட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.