தனியார் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவனை ராகிங் செய்து தாக்கியதாக சீனியர் மாணவர்கள் 6 பேர் மீது வழக்கு


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவனை ராகிங் செய்து தாக்கியதாக சீனியர் மாணவர்கள் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாக உள்ள மாணவர்களைத் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி, செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த விஷ்ணு சாய்ராம் என்பவர் முதலாமாண்டு பொறியியல் படித்து வருகிறார்.

இவரை சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் செய்து வந்துள்ளனர். கடந்த 23-ம் தேதி விஷ்ணு சாய் ராமை பைக்கில் அழைத்து சென்று, தனி அறையில் அடைத்து வைத்து இரும்பு ராடால் தாக்கியதாகவும், போதைப் பொருளை வாயில் வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் ராகிங் செய்த சீனியர் மாணவர்களிடமிருந்து மீண்டுவந்த விஷ்ணு சாய்ராம் நடந்தவற்றை அவரது தந்தை சுதிர்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளர், அலுவலகத்தில் சம்பவம் குறித்து நேற்று புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சீனியர் மாணவர்கள் 6 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

x