ஊத்துக்கோட்டை | தந்தையை தாக்கியவருக்கு அரிவாள் வெட்டு: 3 மகன்கள் உட்பட 4 பேர் கைது


ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பேட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் காட்டான். இவர், பேட்டைமேடு பகுதியில் நடைபெற்று வரும் சித்தூர்-தச்சூர் 6 வழிச்சாலை திட்ட கட்டுமானப் பணியிடத்தில், கடந்த மாதம் கட்டுமான நிறுவன காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், 6 வழிச்சாலை கட்டுமான பணியிடத்தில் இருந்த இரும்பு பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட காட்டானை அந்த இளைஞர்கள் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினர்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பெரியபாளையம் போலீஸார், பேட்டைமேட்டைச் சேர்ந்த சஞ்சய்(19) மற்றும் அவரது நண்பர்கள் என 3 பேரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில், சமீபத்தில் நிபந்தனை பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்த சஞ்சய், நாள்தோறும் பெரியபாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

அந்த வகையில், நேற்று முன்தினம் சஞ்சய் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் தன் உறவினருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் வடமதுரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல், சஞ்சய்யை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சஞ்சய்யை, பெரியபாளையம் போலீஸார் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற சஞ்சய், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரியபாளையம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், காட்டானை அரிவாளால் வெட்டியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அவரது மகன்கள், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சஞ்சயை வெட்டியது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, காட்டானின் மகன்களான, பேட்டைமேட்டைச் சேர்ந்த இன்பநாதன்(47), வினோத்(29), சின்னராசு (28) மற்றும் பூவலம் பேட்டைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன்(25) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

x