புதுவை முன்னாள் காங். அமைச்சரிடம் நூதன முறையில் ரூ.87 ஆயிரம் மோசடி: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை


புதுச்சேரி: புதுவை மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சரிடம் மர்மநபர்கள் நூதனமுறையில் ரூ.87,326 மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் ஷாஜகான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கைபேசியில் தொடர்புகொண்ட மர்மநபர் தன்னை குறிப்பிட்ட தனியார் வங்கி அதிகாரி எனக்கூறியுள்ளார். அத்துடன் முன்னாள் அமைச்சரின் கிரெடிட் அட்டையில் வங்கிக் கடன் தொகையை அதிகப்படுத்துவதாகக் கூறியுள்ளார். அதனையடுத்து முன்னாள் அமைச்சரது வங்கி விவரத்தைப் பெற்றவர், அவருக்கு வந்த ஓடிபி எண்ணையும் கேட்டு பெற்றுள்ளார். அதன்பிறகு திடீரென முன்னாள் அமைச்சரின் கிரெடிட் அட்டையின் கணக்கிலிருந்து ரூ.87,326 மர்மநபரால் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சர் புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், இணையவழியில் பகுதி நேர வேலை வாங்கித்தருவதாகக் கூறிய மர்மநபர்கள், அதன்படி சில இணைய வழி புதிர்களுக்கு விடையளிக்கச் செய்து புதுச்சேரி சேதுராப்பேட் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரிடம் ரூ.1 லட்சமும், முதலியார் பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் ரூ.4.33 லட்சத்தையும் மோசடி செய்தது குறித்தும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

x