நிருபர் என்று கூறி வனத்துறை அதிகாரியை பணம் கேட்டு மிரட்டியவர் கைது


உதகை: நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை அதிகாரியை பணம் கேட்டு மிரட்டிய புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

65 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆபத்தான மரங்களை கணக்கெடுத்து அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிண்ணக்கொரை கேரிங்டன் பகுதியில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணிகளை வன காப்பாளர் சிவானந்தம், காவலர் ஆறுமுகம் ஆகியோர் தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது நீலகிரி மாவட்ட பத்திரிகை நிருபர்கள் என்று கூறி பாபு, சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகிய 3 பேர் வனத்துறை அலுவலர்கள் மற்றும் மரம் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் கான்ட்ராக்டரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குந்தா வனச்சரகர் சீனிவாசன், மஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் மஞ்சூர் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பணம் கேட்டு மிரட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நிருபர் செந்தில்குமாரை கைது செய்தனர். இதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் தலைமறைவாக உள்ள பாபு, சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

x