கரூர்: இரவில் வீட்டுக்குள் தம்பதியை மிரட்டி 22 பவுன் நகை கொள்ளை


கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை முகமூடி கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 22 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை 4 தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள சேங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54) விவசாயி. இவர் மனைவி சுப்புரத்தினம் (47). இவர்களுக்கு இரு மகள்கள். மூத்த மகள் திருமணமாகி மதுரையில் எம்டியும், மற்றொரு மகள் திருச்சியில் பாராமெடிக்கல் படித்து வருகின்றனர். நேற்று துக்க காரியத்துக்கு சென்றுவிட்டு கொல்லைப்புறம் வழியாக வீட்டுக்குள் வந்த தம்பதி குளித்துவிட்டு கதவை பூட்டாமல் அசதியில் தூங்கிவிட்டனர். திடீரென நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த முகமூடி அணிந்த 4 பேர் தூங்கிக் கொண்டிருந்த சுப்புரத்தினம் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ஐந்தரை பவுன் தாலிசங்கிலியை பறித்துள்ளனர்.

மேலும் நகை, பணம் எங்கே வைத்துள்ளீர்கள் என கேட்டு ரவிச்சந்திரனை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன சுப்புரத்தினம் ஹாலில் உள்ள மணி பர்சில் இருந்த இரு தங்க சங்கிலிகள் உள்ளிட்ட 16 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார். பணம் எங்கே என கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளனர். அப்போது பணத்தை எடுப்பதுபோல வெளியே சென்ற சுப்புரத்தினம் குரல் எழுப்பியுள்ளார். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த அவர்கள் உறவினர் தனுஷ் (41) அவரது நண்பர் இருவரும் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற நிலையில் தனுஷை அரிவாளால் வெட்டிவிட்டு காரில் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எஸ்.பி. கே.பெரோஸ்கான் அப்துல்லா, குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், மாயனூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் நேற்றிரவு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

x