காரணம்பேட்டையில் மூதாட்டி கொலை: உணவக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது


பல்லடம்: பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரணம்பேட்டை நான்கு சாலை சந்திப்பில், கடந்த 20-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக, வீட்டின் அருகே உணவகத்தில் வேலை பார்த்தவர்கள் உட்பட 5 பேரை பல்லடம் போலீஸார் கைது செய்து நகையை மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி கண்ணம்மாள் (70). தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகள். இருவருக்கும் திருமணமாகி வாழ்ந்து வருகின்றனர். சுப்பையன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், கண்ணம்மாள் சொந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 20-ம் தேதி வீட்டின் கதவை தட்டி மூதாட்டியை எழுப்பி, அவரிடம் இருந்த 15 பவுன்நகையை பறித்துக்கொண்டு, மூதாட்டியை மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. காரணம்பேட்டை நான்கு சாலை சந்திப்பிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பல்லடம் காவல் ஆய்வாளர் ஜீ. லெனின் அப்பாத்துரை தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கருத்தபாண்டி (27), அதேபகுதிகளை சேர்ந்த பொ. இசக்கிமுத்து (41) மற்றும் கொ.இசக்கிமுத்து (27) ஆகிய 3 பேரை 3 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதில் மேலும் 2 பேர் இன்று (அக். 26) கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக பல்லடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா கூறும்போது, “அம்பாசமுத்திரம் ஊர்க்காட்டை சேர்ந்த பாஸ்கர் (25), அதே பகுதி தெற்கு தெருவை சேர்ந்த மாடசாமி (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று கைது செய்யப்பட்ட பாஸ்கர் என்பவர் கொலை செய்யப்பட்டவரின் வீட்டில் அருகே உள்ள, உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

அவர், ஆவடி நகை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வந்தவர். 15 பவுன் நகையை திருடிவிட்டு, மூதாட்டி கண்ணம்மாளை கொலை செய்துள்ளனர். அந்த நகை மீட்கப்பட்டுள்ளது. இதில் தடயங்கள், சிசிடிவி கேமரா பதிவுகள் எதுவும் இல்லாத நிலையில், உணவகத்தில் பாஸ்கர் மாயமானதை வைத்து தனிப்படை போலீஸார் விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்” என்றார். கொலை நிகழ்ந்த ஒரே வாரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

x