திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் தாளக்குடி, தெற்குத் தெருவை சேர்ந்தவர் விஜயன் மகன் முத்தையன் (30). இவர் தனது தாய் மாரியாயி (50), தம்பி கோபி (27) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
முத்தையன் காச நோயாளி என்பதால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார். கோபி, அவரது தாய் மாரியாயி இருவரும் வேலைக்குச் சென்று குடும்பம் நடத்தி வந்தனர். முத்தையன் வேலைக்குச் செல்லாததை சுட்டிக்காட்டி கோபி அவரை அடிக்கடி வம்பிழுத்து வந்துள்ளார். அவரது தாயார் மாரியாயியும் முத்தையனை வேலைக்குச் செல்லும்படி அடிக்கடி அறிவுறுத்திவந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி சண்டை எழுந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி அன்று, மாரியாயி துணி துவைக்க வெளியே சென்ற நேரத்தில், வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தம்பி கோபியை, அண்ணன் முத்தையன் கடப்பா கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். திரும்பி வந்த மாரியாயி, கோபி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாரியாயி அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்தையனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வாத பிரதிவாதங்கள் முடிவுற்ற நிலையில் நீதிபதி சரவணன் இன்று தீர்ப்பு வழங்கினார். காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள முத்தையன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளி முத்தையன் நேரில் ஆஜராக முடியாத காரணத்தால், புதிய பிஎன்எஸ்எஸ் சட்டப்படி வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதி தனது தீர்ப்பில் முத்தையனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அதைக் கட்ட தவறினால் கூடுதலாக ஆறு மாத சிறை தண்டனையும், தாயை மிரட்டியதற்காக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். வழக்கில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.
புதிய பிஎன்எஸ்எஸ் சட்டத்தின்படி, திருச்சி மாவட்டத்தில் கொலை வழக்கில் முதல் முறையாக வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த வழக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.