புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நாயை மரத்தில் தொங்கவிட்டு கொன்றதாக தாய் - மகன் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்ஷி தாலுகாவின் பிராங்குட் பகுதியில் பிரபாவதி ஜக்தாப் மற்றும் அவரது மகன் ஓம்கார் ஜக்தாப் ஆகியோர், கடந்த அக்டோபர் 22 அன்று தங்களின் செல்லப் பிராணியான லாப்ரடரை குச்சியால் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், அவரது மகன் ஓம்கார், நாயை மரத்தில் தூக்கிலிட்டு கொன்றார்.
சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் எழுப்பினார். அதே நேரத்தில் நாய்களுக்கான தங்குமிடத்தை நடத்தும் மிஷன் பாசிபிள் அறக்கட்டளையை நடத்தும் விலங்கு ஆர்வலரான பத்மினி ஸ்டம்ப், நாயை கொன்றதாக தாய் மற்றும் மகன் மீது புனே கிராமப்புற காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதுகுறித்து பேசிய பாட் சாலை காவல் நிலைய மூத்த ஆய்வாளர் சந்தோஷ் கிரிகோசாவி, “அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். நாய்க்குட்டியைக் கொல்வதற்கு முன், அவர்கள் நாய் பிரியர் ஒருவரை அழைத்து நாயை அழைத்துச் செல்லும்படி கூறினர். ஆனால் பின்னர், அவர்கள் ஒரு மரத்தில் தொங்கும் நாயின் படத்தை அனுப்பினர். நாங்கள் அங்கு விரைந்து சென்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தோம்.
குடும்பத்தினர் நாயை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, வெறிநாய்க்கடி உள்ளிட்ட சில பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளனர். செல்லப்பிராணிக்கு ரேபிஸ் இருப்பதாகக் கருதி, அவர்கள் அதைக் கொன்றிருக்கலாம் என நினைக்கிறோம்" என்று அவர் கூறினார்.